சபாபதியாரின் கதைப்பகுதிக்கு வருக வருகவே இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல வாங்க கதையை பார்ப்போம்.
கொடுகு பட்டிணம் எனும் ஊரில் கவிக்குட்டன் என்று
ஒருவன் இருந்தான். இவனுக்கு புத்தி எப்பொழுதும் காது வழியாக கசிந்து கொண்டே இருக்கும்
அப்பேற்பட்ட புத்திசாலி.ஒருசமயம் காய்கறி வாங்க கடைவீதிக்கு சென்றான். புடலங்காய் வாங்கியவன்
புடலங்காய் ஏன் வளைந்திருக்கிறது என்று காய்கறிக்காரரைக் கேட்டான். காய்கறிக்காரரும்
"முதலிலேயே கல்லைக் கட்டியிருந்தால் அது நேராக வளர்ந்திருக்கும். அப்படிச் செய்யாமல்
விட்டதால் தான் இப்படி வளைந்து விட்டது" என்றார்.
இப்படிப் பொது அறிவை வளர்த்துக் கொண்ட கவிக்குட்டன் தன் வீட்டிற்குச் சென்றவுடன் வீட்டில்
இருந்த குட்டி நாயின் வால் வளைந்திருப்பதைக் கவனித்தான். உடனே அவன் மூளையில் மின்னல்
வெட்டியது. சமீபத்தில் பெற்ற ஞானத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த கவிக்குட்டன்
உடனடியாக ஒரு கல்லை எடுத்து நாய் வாலில் கட்டி விட்டான். நாய் பாடு திண்டாட்டமாகி விட்டது.
அது பரிதாபமாகக் கத்தி அமர்க்களம் செய்ய ஆரம்பித்து விட்டது. நாயின் கூக்குரலை சகித்துக்
கொள்ள முடியாமல் வந்து பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாருக்கு கவிகுட்டனிடம் பேச்சுவார்த்தை
நடத்தி நாயின் வாலில் இருந்து கல்லைக் கழற்ற
வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது.
இந்த கவிகுட்டனின் செய்கை பைத்தியக்காரத்தனமானதாகவும்
கேலிக்குரியதாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் நாமும் அப்படி எத்தனையோ முட்டாள் தனங்களை
நம் வாழ்க்கையில் செய்து கொண்டே செல்கிறோம்.
நாய் வாலைப் போல் நம்மால் மாற்ற முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
மாற்ற முடியாத மனிதர்களும் இருக்கத் தான் இருக்கிறார்கள். சரிசெய்து தான் தீருவேன்
என்று மல்லுக்கட்டி நின்றால் இந்த விஷயத்தில் நாம் வெற்றி காணப்போவதில்லை. வாழ்நாள்
முழுவதும் முயன்றாலும் இயற்கையை மாற்ற முடியாது.
ஏன் மாற்ற முடியாது? என்று கேட்டு மற்றவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வரப் பாடுபடும்
பலரைப் பார்த்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் தேவையில்லாத ஈகோவைத் திருப்திப்படுத்துவதை
விட வேறொரு பலனும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நாய் வாலில் கல்லைக் கட்டிய முல்லாவைப்
போல் இவர்களும் அடுத்தவர் மீது திணிக்கும் அந்தக் கட்டாயம் அடுத்தவருக்கும் பிராண சங்கடம்.
ஆகவே நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பதைக் கேட்பதை விட்டு நாய் வாலை நிமிர்த்துவது
தேவையா அவசியமா என்று முதலில் சிந்திப்பது தான் புத்திசாலித்தனம். இதை சாதித்து கிடைக்கப்
போகிற பலன் என்ன என்று கணக்கு போட்டுப் பார்ப்பது விவேகம்.
எனவே இப்படி நாய் வாலை நிமிர்த்துவது போன்ற ஏதாவது ஒரு காரியத்தை நாம் நம் வாழ்க்கையில்
செய்து கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வது உத்தமம்.
அப்படி இருக்குமானால் அதை உடனடியாக விட்டு விடுவது நல்லது. நாம் செய்ய வேண்டிய உருப்படியான
காரியங்கள் நிறையவே இருக்கின்றன. நமது கவனத்தை அந்தப் பக்கம் திருப்புவோமாக.
No comments:
Post a Comment